நாடி சாஸ்திரம் ௧
நமது இருதயத்தின் இடது சடாரம் குவியும் பொழுது இரத்தம் தள்ளப்பட்டு கண்டரையின் மூலம் சகல நாளங்களுக்கும் பாய்வதால் நாளங்கள் விரியும்-மீண்டும் இடது சடாரம் விரியும்பொழுது குருதி இழுக்கப்படுவதால் நாளங்கள் சுருங்கும்,இவ்விதம் இருதயம் விரியவும் சுருங்கவும் இருப்பதால் இதனைச் சேரந்த நாடி நரம்புகளும் விரிந்து சுருங்கும் தன்மையுடையதாக இயங்கி இருதய நடையின் மாறுதல்களைத் தெரிவிக்கிறது,இருதயத்தின் நிலையும் உடல் நிலைக்கேற்ப மாறுபாடடைவதால் அவற்றை நாம் நாடித்துடிப்பின் மூலம் அறிய முடிகிறது.
நாடித்துடிப்பினை தசநாடி இருப்பிடங்களிலும் உணரலாம் எனினும் இதில் கரமே எளிதிலும் தெளிவுடனும் பார்க்கத்தக்கது, கைகளில் அறிவதே நலமாகும்,எனவே ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டும்,முன்கையின் ஆரை எலும்பின் மேற்புறமுள்ள பெருநாடியை மணிக்கட்டிற்கு கீழே பெருவிரலின் அடியில் ஒரு அங்குலம் கீழே மூன்று விரல்களால் மாறி மாறி மெதுவாக அழுத்தியும் தளர்த்தியும் பார்க்க வேண்டும், அவ்வமயம் நமது ஆட்காட்டி விரலில் உணர்வது வாதம் எனவும் நடுவிரலில் உணர்வது பித்தம் எனவும் மோதிரவிரலில் உணர்வது சிலேத்துமம் எனவும் அறியவும், மற்றும் பெருவிரல் சிறுவிரலில் பூதநாடியும் ,குருநாடி ஐந்து விரல்களிலும் சேர்ந்து நிற்கும், இதில் எண்ணிக்கை ,நடை ,அழுத்தம், தன்மை, எழுச்சியின் அளவு இவற்றை அறிய வேண்டும்.
நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன் ஆச்சாரியார் .
